Sakkraviyugam

September 11, 2026

ஆளுநர் வழக்கில் மத்திய அரசின் கோரிக்கையை அப்படியே நிராகரித்த உச்சநீதிமன்றம்

ஆளுநர் வழக்கில் தீர்ப்பை சரிபார்க்கும் விவகாரத்திற்குள் நாங்கள் செல்ல மாட்டோம் – தலைமை நீதிபதி திட்டவட்டம்

டெல்லி: சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கால அவகாசத்தை நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக மத்திய அரசு கோரிக்கை வைத்த நிலையில், நீதிமன்றம் அதை நிராகரித்துள்ளது.

மசோதாக்களை நிறைவேற்றும் விவகாரத்தில் ஆளுநர், குடியரசுத் தலைவருக்கான கால நிர்ணயம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தொடர்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், மத்திய அரசு முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி இருந்த நிலையில், ஆளுநரும் குடியரசு தலைவரும், மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.

இதற்கு மத்திய அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருந்தது.

மறுபுறம் குடியரசுத் தலைவர் இந்த விவகாரம் தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த கேள்விகள் குறித்து உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை மேற்கொண்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய், நீதிபதிகள் சூரியகாந்த் விக்ரம்நாத், பி.எஸ் நரசிம்மா, அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வழக்கு விசாரணையில் கேரள மற்றும் கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தனர். குறிப்பாக தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கில் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ரத்து செய்யக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர்.

இதனை அடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தமிழக அரசு தொடுத்த வழக்கில் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கி இருந்த தீர்ப்ப தவறானது என்று கூறவேண்டும் என வாதங்களை முன்வைத்து இருந்தார்.

இதனை எதிர்த்து வாதங்களை முன்வைத்த தமிழக அரசு சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வில்சன், “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தங்களை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நல்லாட்சி வழங்க வேண்டும் என்றால், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறை ஆளுநரின் அதிகாரமாக இல்லாமல் சட்டமன்ற நடைமுறையின் ஒரு பகுதியாக தான் இருக்க வேண்டும். குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் வழக்கின் தீர்ப்பிலேயே பதில் இருப்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வேண்டும், என்கிற தீர்ப்பை நாங்கள் நீதிமன்றத்தில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்து பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பை தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களும் கொண்டாடுவதால் அதற்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது” என்று வலியுறுத்தினார். வில்சனின் வாதத்தை குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஆளுநர் வழக்கில் தீர்ப்பை சரிபார்க்கும் விவகாரத்திற்குள் நாங்கள் செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார்.

Scroll to Top