Sakkraviyugam

September 11, 2026

திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் சுகாதாரப் பேரவை கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் (23.09.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும், அனைத்து விதமான மருத்துவச் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு சிறப்பானத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் சுகாதாரப் பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 01 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,

01 மாவட்ட அரசு மருத்துவமனை,

08 அரசு மருத்துவமனைகள்,

69 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

27 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்,

341 துணை சுகாதார நிலையங்கள்

மூலம் பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களை தேடி மருத்துவத்திட்டம், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம், பள்ளி சிறார் கண்ணொலி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம், மகப்பேறு சத்துணவு பெட்டகம் வழங்கும் திட்டம், தாய் சேய் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம், சானிடரி நேப்கின் வழங்கும் திட்டம், குடல்புழு நீக்கம் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்ட சுகாதார பேரவை என்பது சுகாதாரம் குறித்த சமூக பொறுப்புடைமையை மக்களிடையே உருவாக்கி மக்கள் தங்களுக்கு தேவையான நலக் கட்டமைப்புகளை மாநிலம் மற்றும் மாவட்ட சுகாதார பேரைவைகள் வாயிலாக பெற்றிட இந்த சுகாதார பேரவைகள் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட சுகாதார பேரவையில் ஏற்கனவே வட்டார அளவில், நடத்தப்பட்ட வட்டார சுகாதாரப் பேரவை கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு, மாவட்ட அளவில் தீர்வு காண இயலும் தீர்மானங்கள் மாவட்ட அளவில் சரிசெய்யப்படும். மேலும், மாவட்ட அளவில் சரி செய்ய இயலாத தீர்மானங்கள், மாநில அளவில் தீர்வு பெறும் பொருட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களில் நடத்தப்பட்ட வட்டார சுகாதாரப் பேரவை தீர்மானங்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்ற சுகாதார பேரவை தீர்மானங்கள் விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், துணை மேயர் ர.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), உமா மகேஸ்வரி (1-ம் மண்டலம்), மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, முதல்வர் (திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை) மரு.மனோன்மணி, மாநகர நல அலுவலர் மரு.முருகானந்த், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) காளிதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணக்குமார், மாநகராட்சி சுகாதாரக்குழுத்தலைவர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Scroll to Top