Sakkraviyugam

September 11, 2026

நோட்டாவிற்கு 4431வாக்குகள் விழச்செய்து, நோட்டா மூன்றாம் இடம் பிடிக்கக் காரணம் – தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி

தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் பதிவை இரத்து செய்து ஜனநாயப் படுகொலை செய்த, இந்தியத் தேர்தல் ஆணையத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநிலத் தலைவர் பூமொழி அவர்கள் கூறியதாவது :

தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் என்ற பெயரில், 2004ஆம் ஆண்டு முதல், காவல்நிலைய மற்றும் சிறைச்சாலை சித்திரவதைகள் மரணங்கள், என்கவ்ண்டர் என்ற பெயரிலான போலி மோதல் படுகொலைகள், சாதித் தீண்டாமை வன்கொடுமைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான பழங்குடி ஆதிவாசி மலைவாழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதங்களுக்கு எதிராக, ஒட்டுமொத்த குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் உட்பட எந்த பயன்களும் செய்துதராமல் வஞ்சிக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக, நீதிமன்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டம் மற்றும் களப்போராட்டங்களை முன்னெடுத்துக் காத்திரமாகச் செயல்பட்ட நிலையில், இயக்கங்கள் அமைப்புகள் சங்கங்கள் பெயரில் “மனித உரிமை” என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்ததன் பெயரில், அதனை ஏற்று அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அதை அரசிதழில் வெளியிட்டது. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். இதனால் மக்கள் பணி செய்வதில் தொய்வு ஏற்படுவதை உணர்ந்து, அந்த பெயரில் பயணிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்து, தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் என்ற பெயரில் 2010ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டு, அதன் தொடர்ச்சியாக அரசியல் பொதுக் களத்தில் செயல்பட முடிவு செய்து, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு முதல், 56/35/2016/PPS-I என்ற இந்தியத் தேர்தல் ஆணைய பதிவுடன் செயல்படுகின்றோம்.

2013ஆம் ஆண்டில் நடைபெற்ற ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் சார்பில், நோட்டா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டோம். அதில், நோட்டாவிற்கு 4431வாக்குகள் விழச்செய்து, நோட்டா மூன்றாம் இடம் பிடிக்கக் காரணமானோம்.

2014ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் நோட்டா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு, தமிழகத்தின் 39தொகுதிகளில் மட்டுமே 1.4% வாக்குகள் நோட்டாவில் விழுவதற்கு ஒற்றைக் காரணமாகி, தேசிய அளவில் மாபெரும் அடையாளமானோம்.

தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி பதிவு செய்யப்பட்ட 2016 அதே ஆண்டில், பதிவு செய்யப்பட்ட கட்சியாலும் நோட்டா விழிப்புணர்வு பரப்புரை செய்ய முடியும் என்ற அடிப்படைப்படையிலும், இந்தியாவிலேயே முதன்முறை நோட்டா பரப்புரை செய்த கட்சி நாமாக இருப்போம் என்ற அடிப்படையிலும், தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தீவிர நோட்டா விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டு, 1.3% வாக்குகள் நோட்டாவில் பதிவாகக் காரணமாகி இந்திய அளவில் தொடர்ந்து மாபெரும் பேசுபொருளானோம்.

2021ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலிலும், 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், அதிமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றினோம். இந்நிலையில், கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் வழியில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியும், தமிழக அரசுச் செயலருமான அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் அவர்கள் மூலம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சிக்கு சென்ற 12.08.2025 அன்று சோக்காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு உரிய காரணத்துடன் பல்வேறு ஆதாரங்களுடன், சென்ற 16.08.2025 அன்று தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் சார்பில் விளக்கமாக பதில் அனுப்பினோம். நேரில் விளக்கமளிக்க 19.08.2025 அன்று அர்ச்சனா பட்நாயக் அவர்களிடமிருந்து கடிதம் வந்ததன் அடிப்படையில், 25.08.2025 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் அர்ச்சனா பட்நாயக் அவர்களை, நானும் (பூமொழி மாநிலத் தலைவர் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி) பொதுச்செயலாளர் கோபிகண்ணனும் நேரில் சந்தித்து உரிய விளக்களித்தோம். இந்நிலையில்தான், தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி உட்பட 42 கட்சிகளின் பதிவை இரத்து செய்து உத்தரவிட்டு, ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்தது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(C) பிரிவில் கூறியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் 29A(5) பிரிவில், அரசியல் கட்சிகளைப் பதிவு செய்யவேண்டும் என்று தான் இருக்கிறதே தவிர, கட்டாயம் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் The Representation of People Act 29A(5) பிரிவில் கூறியுள்ளபடி ஏமாற்றுதல், மோசடி செய்தல் போன்ற காரணங்களுக்கா கட்சியின் பதிவை இரத்து செய்யலாம் என்று மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. தேர்தலில் நிற்காத காரணத்தை வைத்து கட்சியின் பதிவை இரத்து செய்யலாம் எனக் குறிப்பிடவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 324வது பிரிவின் அடிப்படையில், நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. அந்தப் பிரிவு, தேர்தலை நடத்துவதற்கும் தேர்தலைக் கண்காணிப்பதற்காக மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கி இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்வதற்கான எந்த ஒரு வழிகாட்டுதலும் 354வது பிரிவில் குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்றம் காங்கிரஸ் எதிர் இன்ஸ்டிடூட் ஆப் சோசியல் வெல்பேர் என்ற வழக்கில், 10.05.2002ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்,

“ஓர் அரசியல் கட்சியைப் பதிவு செய்து தான் பிறப்பித்த உத்தரவை அக்கட்சி அரசமைப்புச் சட்டத்தை மீறியுள்ளது என்பதற்காகவோ, தேர்தல் ஆணையத்திற்கு அளித்த உத்தரவாதத்தை மீறிவிட்டது என்பதற்காகவோ வழங்கப்பட்ட பதிவை மீளாய்வு செய்வதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை” என்று பத்தி 41.2ல் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்யும் அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்பது தெளிவாகிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகார நடவடிக்கை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் எதிராக உள்ளது. அடிப்படை உரிமையைப் பறிக்கும் தேர்தல் ஆணையத்தின் இந்த ஜனநாயகப் படுகொலையை, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக, ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி மேல்முறையீடு செய்யும்.

தேவைப்பட்டால், உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டத்தையும் மேற்கொள்வோம் என்பதை இதன்மூலம் தெரிவிக்கிறோம்.

Scroll to Top