தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு அறிக்கை !
கார்ப்பரேட் தனியார் கம்பெனியின் சில்லறை வணிகத்தை கண்டித்து அந்நிறுவனம் அமைய உள்ள இடத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர்வீ. கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் முக்கிய வருவாய் ஆதாரமாக சில்லறை வணிகம் விளங்கி வருகிறது. அண்மைக்காலமாக அகில இந்திய அளவில் பெருகிவரும் கார்ப்பரேட் கம்பெனிகள் டிபார்ட்மென்ட் ஸ்டோர் சூப்பர் மார்க்கெட் மளிகை வணிகம் என துவங்கி தற்போது சிறு குறு நடுத்தர வணிகர்களை பாதிக்கும் வகையில் எடை குறைப்பு உள்ளிட்ட ஏமாற்று சலுகைகளுடன் வஞ்சக வளைவிரித்து சில்லறை வணிகம் செய்து வருகின்றன. இவர்களோடு போட்டியிட முடியாமல் சில்லறை வணிகர்கள் வணிகத்தை இழந்து வருவாயை இழந்தும் சுருங்கச் சொன்னால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வணிகத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுவது இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதமாகவே கருத வேண்டியுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்திற்கு மாற்றாக கருதப்படும் சில்லறை வணிகத்தில் இளைஞர்கள் லட்சக்கணக்கான ஈடுபட்டு வரும் நிலையில் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தால் எல்லா தரப்பு வணிகர்களும் இருள் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
இந்திய கார்ப்பரேட் தனியார் நிறுவனம் ஒன்று திருச்சியில் ஏற்கனவே இரண்டு கிளைகளுடன் பெரிய அளவில் இயங்கி வருகின்றது. தற்போது திருச்சி வயலூர் ரோடு, வாசன் வேலி பகுதியில் சுமார் 1,50,000 சதுர அடி பரப்பளவில் தனது 3- வது கிளையினை துவக்க ஆயத்தமாகி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு பகுதியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் கடை விரிப்பதால் அந்தந்த பகுதிகளில் உள்ள சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே கார்ப்பரேட் தனியார் நிறுவனம் சில்லறை வணிகததில் ஈடுபடுவதை கண்டித்தும், இந்திய சில்லறை வணிகத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் இன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா தலைமையில் தனியார் நிறுவனத்தின் 3-வது கிளை அமைய உள்ள திருச்சி வயலூர் ரோடு, வாசன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலம் தழுவிய அனைத்து நிர்வாகிகள் இளைஞர் அணியினர் மற்றும் அனைத்து தரப்பு வணிகர்கள் பங்கேற்கும் முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது. மண்டல, மாவட்ட , மாநகர, கிளைச்சங்க இந்திய சில்லறை வணிகத்தின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு நடைபெற இருக்கும் முற்றுகை போராட்டத்தில் மாநில மண்டல, மாவட்ட ,கிளை சங்க நிர்வாகிகள், இளைஞர் அணியினர் மற்றும் அனைத்து தரப்பு வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு தெரிவித்துள்ளார்.