Sakkraviyugam

May 22, 2026

“முச்சந்தியில்” – மாமா! – மாப்ளே!

இடம்: மதுரை கோரிப்பாளையம் சிக்னல் ஓரம்.


மாப்ளே: என்ன மாமா… ரொம்ப நேரமா யோசனையாவே இருக்கீய? எலக்‌ஷன் ரிசல்ட் வந்துருச்சேன்னு கவலையா, இல்ல அந்தப் பக்கம் வர்ற வடை வாசம் உங்களை இழுக்குதா?

மாமா: வடையாவது கருவாடாவது… இங்க பாரு மாப்ளே, இந்த ‘தளபதி’ தம்பி பண்றது எனக்கென்னவோ கொஞ்சம் இடிக்குதுடா. அரசியலுக்கும் பண்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத ஆளா அவர்?

மாப்ளே: என்ன மாமா சொல்றீங்க? அவருதான் ஸ்டாலின் சார், வைகோ, திருமாவளவன்னு எல்லா சீனியர் தலைவர்களையும் பார்த்து ஆசிர்வாதம் வாங்குனாருல்ல… இதுல என்ன தப்பு?

மாமா: அடேய் மாப்ளே… அங்கதான் நீ கோட்டை விடுற. ஸ்டாலின் சாரை முதலமைச்சர்னு போய் பார்த்தது மரியாதை. ஆனா, அதுக்கு முன்னாடி அதே பதவியில இருந்த எடப்பாடியாரை மட்டும் ஏன் பார்க்கல? அதுதான் என் கேள்வி.

மாப்ளே: ஓ… எடப்பாடி பழனிசாமி சாரையும் பார்த்திருக்கணும்னு சொல்றீங்களா?

மாமா: பின்ன? ‘அரசியல் வேறு – பண்பாடு வேறு’னு மேடைக்கு மேடை பேசுனா மட்டும் போதாது மாப்ளே. தமிழ் பண்பாடுன்னா என்ன? எதிரியா இருந்தாலும் முன்னாடி பதவியில இருந்தவங்களுக்கு ஒரு மரியாதை கொடுக்கிறதுதானே? ஸ்டாலின் சாரை பார்த்த கையோட எடப்பாடியாரையும் பார்த்திருந்தா, இவரு நிஜமாவே ஒரு ‘வித்தியாசமான அரசியல்வாதி’ன்னு பேர் கிடைச்சிருக்கும்.

மாப்ளே: நீங்க சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு மாமா. ஆனா இவரு அண்ணன் அன்புமணி, முஸ்லிம் லீக் தலைவர்கள்னு வரிசையா எல்லாரையும் பார்த்தாரு. அந்த லிஸ்ட்ல எடப்பாடியார் பெயர் விடுபட்டது வேணுமேனு பண்ணதா இல்ல மறந்துட்டாரா?

மாமா: இதெல்லாம் மறக்குற விஷயமாடா? எல்லாரையும் பார்த்துட்டு எடப்பாடியாரை மட்டும் தவிர்க்கிறதுங்கிறது ‘உச்சகட்ட தவறு’. அரசியல்ல போட்டி இருக்கலாம், ஆனா ஒரு முன்னாள் முதலமைச்சரைச் சந்திக்காம விடுறது, அவர் மேல வச்சிருக்கற ஏதோ ஒரு வருத்தத்தை காட்டுற மாதிரி இருக்கு. இதுல எங்க இருக்கு பண்பாடு?

மாப்ளே: நீங்க சொல்றதை பார்த்தா, ‘யாரை வேணும்னாலும் பாரு… ஆனா முறைப்படி எல்லா முக்கியப் புள்ளிகளையும் பாரு’ன்னு சொல்றீங்க. கரெக்டா?

மாமா: அதானே முறை! ஒருத்தரை மட்டும் விட்டுட்டு மத்தவங்களைப் பார்த்தா, அது ‘பாரபட்சம்’னு ஆயிடும். அரசியல்ல நுழையறப்போவே இப்படி ஒரு தரப்பை மட்டும் தள்ளி வச்சா, அப்புறம் எப்படி எல்லாருக்கும் பொதுவான தலைவரா ஆக முடியும்? மதுரைக்காரன் கல்யாண பத்திரிக்கை வைக்கிறப்பவே பங்காளியில ஒருத்தரை விட்டுட்டு வச்சா, அங்க பஞ்சாயத்து எப்படி வெடிக்கும்? அந்த மாதிரிதான் இதுவும்!

மாப்ளே: ஆஹா… பங்காளி சண்டையை இங்க கொண்டு வந்துட்டீங்களே மாமா! ஆனா நீங்க சொல்றது நிஜம்தான். அரசியல் நாகரிகம்ங்கிறது எல்லாருக்கும் பொதுவானதுதான்.

மாமா: இதையெல்லாம் அந்தத் தம்பி யோசிச்சிருக்கணும். சரி விடு… அடுத்த தடவை சந்திப்பாரான்னு பார்ப்போம். அதுக்குள்ள அந்தத் டீயைச் சொல்லு… தொண்டை காஞ்சு போச்சு!


– முச்சந்தி அரட்டை தொடரும்.……..

Scroll to Top