Sakkraviyugam

September 11, 2026

அண்ணாமலை “காத்திருப்பாரா அல்லது களம் இறங்குவாரா?”

அதிமுக Vs அண்ணாமலை….
மோதலில் முடிந்த முடிவும், ஒதுக்கப்பட்ட தலைவரும்!
ஒரு வியூகப் பார்வை….

தமிழக பாஜக-வின் அசுர வளர்ச்சியைத் தன் தோளில் சுமந்தவர் என்று ஒரு தரப்பாலும், அதிமுக-வுடனான 30 ஆண்டுகாலப் பந்தத்தை முறித்தவர் என்று மறுதரப்பாலும் விமர்சிக்கப்படும், தமிழக பாஜக-வின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, தற்போது தேசிய அரசியலிலோ அல்லது மாநில அரசியலிலோ முன்னால் தெரியாமலிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

  1. ‘தனி ஆளுமையும்.. டெல்லி கவலையும்!
    2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை. குறிப்பாக, அதிமுக-வுடன் கூட்டணி முறிந்ததற்கு அண்ணாமலையின் பிடிவாதமான போக்கே காரணம் என டெல்லி தலைமை கருதுவதாகச் சொல்லப்படுகிறது.

பாஜக என்பது எப்போதும் ‘கட்சி’க்கு முன்னால் ‘நபர்’ வருவதை விரும்புவதில்லை. ஆனால், தமிழகத்தில் “பாஜக = அண்ணாமலை” என்ற பிம்பம் உருவானது. இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் டெல்லி மேலிடத்திற்கு ஒருவித நெருடலை ஏற்படுத்தியது. கட்சியை விடத் தனிநபரின் புகழ் ஓங்குவது எதிர்காலத்தில் சிக்கலை உருவாக்கும் எனத் தலைமை கணித்தது.

  1. ‘ஆக்ரோஷ’ அரசியல் vs ‘நிதான’ அரசியல்:
    அண்ணாமலையின் அரசியல் பாணி மிகவும் ஆக்ரோஷமானது. இது இளைஞர்களை ஈர்த்தாலும், பாரம்பரிய அரசியல் கட்சிகளுடனான உறவைச் சிதைப்பதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மூத்த தலைவர்களை அவர் கையாளும் விதம் குறித்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட ‘நெகட்டிவ்’ ரிப்போர்ட்கள் அவருக்குச் பின்னடைவை ஏற்படுத்தின. 2026 சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதால், “மென்மையான” ஒரு அணுகுமுறையை நோக்கி பாஜக நகர விரும்பியது.

*3. ‘ஆக்ஸ்போர்டு’ – ஒரு கௌரவமான வழிமுறை!
2026 தேர்தலுக்கு முன் அவரை மீண்டும் கொண்டு வருவதா அல்லது புதிய தலைமையைக் கொண்டு வருவதா என்பதைத் தீர்மானிக்க டெல்லிக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது. கட்சிக்கு முன்னால் தனிநபர் புகழ் ஓங்குவதை டெல்லி விரும்பாது என்பதற்கு அண்ணாமலையே ஒரு சாட்சி. நேரடியாகப் பதவியைப் பறித்தால் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். எனவே, ‘மேற்படிப்பு’ என்ற கௌரவமான காரணத்தைக் காட்டி, அவரைத் தமிழக அரசியலில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைத்ததே டெல்லியின் ராஜதந்திரம்.

அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்விக்காகச் சென்றார். அது கட்சித் தலைமையால் அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ‘கூலிங் பீரியட்’ (Cooling Period) என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

4. இரண்டாம் கட்டத் தலைவர்களின் எழுச்சி:
இதன் மூலம் புதிய ஒருங்கிணைப்புக் குழுவை எச்.ராஜா தலைமையில் உருவாக்கி, மற்ற கட்சிகளுடன் இணக்கமான உறவை வளர்க்க பாஜக திட்டமிட்டது. அண்ணாமலை இல்லாத நேரத்தில், சுதாகர் ரெட்டி, எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கட்சியில் ‘தனிநபர் அதிகாரம்’ குறைவதைக் காட்டுகிறது.

5. பிரதமரின் கோயம்புத்தூர் வருகையும்.. அண்ணாமலையின் புறக்கணிப்பும்!
பொதுவாக, பிரதமரின் வருகையின் போது மாநிலத் தலைவர்கள் அல்லது முக்கியத் தலைவர்கள் முன்னால் நிற்பது வழக்கம். பிரதமர் மோடி கேரளப் பரப்புரைக்காகக் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்தபோது, அண்ணாமலை அங்கு இல்லை. இது சாதாரணச் செய்தி அல்ல, ஒரு மிகப்பெரிய புறக்கணிப்பு. இது அவர் டெல்லி தலைமை மீது கொண்டிருந்த கடும் அதிருப்தியின் வெளிப்பாடாகும்.

“காத்திருப்பாரா அல்லது களம் இறங்குவாரா?”
அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும், மேலிடத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை “ஒதுக்கப்படவில்லை”, மாறாக “மறுசீரமைப்பு” செய்யப்படுகிறார் என்பதே தற்போதைய யதார்த்தம். அண்ணாமலையின் அத்தியாயம் முடிந்துவிடவில்லை. அவர் ஒரு ‘ஸ்பேர் வீல்’ போல டெல்லியால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளார். 2026-சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், அவர் மீண்டும் ஒரு புதிய வியூகத்துடன் வரலாம் அல்லது தேசிய அளவில் ஒரு புதிய பொறுப்பை ஏற்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Scroll to Top