Sakkraviyugam

April 18, 2026

‘தமிழினி’ திரைப்பட போஸ்டர் சொல்லும் சேதி என்ன?

சர்வதேச விருது பெற்ற ‘பனையேறி’ கூட்டணியின் மற்றொரு மைல்கல்!

‘தமிழினி’ திரைப்பட போஸ்டர் சொல்லும் சேதி என்ன?

துபாயில் நடைபெற்ற சர்வதேசக் குறும்படப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட படங்களை முறியடித்து, இயக்குனர் ஆட்டோகிராப் சேரன் மற்றும் மாநாடு வணங்கான் திரைப்படப் புகழ் இயக்குனர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசினை வென்ற ‘பனையேறி’ குறும்படத்தின் வெற்றியினைத் தொடர்ந்து, அதே கூட்டணி இப்போது வெள்ளித்திரையில் கால் பதிக்கிறது.

திசையன்விளையைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் டி.பி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் மூர்த்தி இயக்கத்தில் ‘தமிழினி’ என்ற புதிய திரைப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வெண் திரையில் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போஸ்டர் சொல்லும் செய்திகள் இதோ:
உண்மைச் சம்பவங்களின் தொகுப்பு?:

போஸ்டரின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் என்ற வாசகம், இது வெறும் கற்பனை கதையல்ல, நம் மண்ணில் நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் ஒரு யதார்த்தமான பதிவு என்பதை உணர்த்துகிறது.

கால மாற்றமும் குறியீடுகளும்:
போஸ்டரின் பின்னணியில் உள்ள சுவரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மற்றும் விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இது மூன்று வெவ்வேறு தலைமுறைகளின் தாக்கம் அல்லது அந்தச் சித்தாந்தங்களின் பின்னணியில் இந்தக் குடும்பத்தின் கதை நகர்வதைக் காட்டுகிறது.

எதார்த்தமான குடும்பச் சூழல்:
இந்தப் படம் முழுக்க முழுக்கக் கடல் சார்ந்த மீனவ மக்களின் அன்றாட வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் ஆழ்கடல் அரசியலைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய உள்ளது. பனையேறி குறும்படத்தில் விளிம்பு நிலை மக்களின் வலிகளைப் பதிவு செய்தது போலவே, ‘தமிழினி’யிலும் மீனவர்களின் எதார்த்தமான வாழ்வை இயக்குநர் படமாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் குழுப் புகைப்படம் போன்ற தோற்றம், இந்தக் கதை குடும்ப உறவுகளையும், அவர்களுக்குள் இருக்கும் பாசப் போராட்டங்களையும் மையமாக வைத்திருக்கும் என்பதைச் சொல்கிறது. இதில் இடம்பெற்றுள்ள பாத்திரங்களின் தோற்றம் மிக எதார்த்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நட்சத்திரப் பட்டாளம்:
இப்படத்தில் தீபா சங்கர், பெஞ்சமின், வின்சென்ட் ராய் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜே ஆசிக் மற்றும் பிரதீப் ராஜ் கதாநாயகர்களாகவும், ஷாஷா சிவகுமார் மற்றும் புஷ்ப லதா கதாநாயகிகளாகவும், தயாரிப்பாளர் டி.பி. சரவணன் இப்படத்தில் ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் தோன்றுவது குறிப்பிடத்தக்கது.

சக்கர வியூகம்:


“மண்ணின் மணம் வீசும் படைப்பு!” திசையன்விளை போன்ற ஒரு சிறிய நகரிலிருந்து சர்வதேச விருது வரை சென்ற டி.பி. சரவணன் – கணேஷ் மூர்த்தி கூட்டணி, இப்போது மீனவர்களின் வலிகளைப் பேச முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. தென் தமிழகக் கடலோரப் பகுதிகளின் எதார்த்தத்தைச் சொல்லும் இந்தப் படைப்பு, பெரிய வரவேற்பைப் பெறும். குறிப்பாகத் தென் தமிழகத்தின் வாழ்வியலைப் பேசும் படங்களுக்கு இப்போது நல்ல வரவேற்பு உள்ள நிலையில், ‘தமிழினி’ திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகிறது.

Scroll to Top