குப்பை மலை?
குப்பை மேலாண்மையில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் – வரும் தலைமுறையினரை காக்க இந்த முன்னெடுப்பு மிகவும் அவசியமானது.
தூய்மை பணியாளர்களின் பணி சூழ்நிலையை ஒரு வினாடி எண்ணிபாருங்கள்!
- கடந்த 20 ஆண்டுகளில் குப்பை பல நூறு மடங்கு பெருக காரணம் என்ன??
- நாம் படிக்கின்ற கல்வியில் ஒரு சதவீதம் கூட எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை கல்விகூட இல்லை.
- உணவு கலாச்சாரம் தான் 90 சதவீதம் குப்பை உருவாவதற்கு காரணம் என்றால் யாராவது நம்புவார்களா? ஆம் நம்பித்தான் ஆக வேண்டும்.
- அடுக்கு அடுக்காய் அலமாறியில் சில்வர் டம்ளர், தட்டுகள், சம்படம், தூக்குவாளி உள்ளிட்டவை கண்ணாடி திரையில் கெளரவத்திற்கு காட்சியளிக்கிறது.
குருமாவிற்கு, சாம்பாருக்கு, சட்னிக்கு, பொறியலுக்கு, தயிருக்கு, ரசத்திற்கு என தனி தனி கவர்கள். இவற்றை எடுத்து செல்ல தனிகவர். இவை அனைத்தும் முழுமையாக உண்ணபடாமல் கவரில் தேங்குகிறது. அப்படியே குப்பையாக தெருவில், சாலை ஓரங்களில் சுருட்டி வீசப்படுகிறது. பாத்திரங்களில் வாங்கினால் கழுவறது யார்?
பால், தயிர், இட்லி மாவு, எண்ணெய் வகைகள் என அனைத்தும் பிளாஸ்டிக் கவரில் தான் வருகிறது. ஏன் 5, 10, 25 லிட்டர் கேன்களில் கடைகளுக்கு வழங்கினால், சில்லறை வணிகம் செய்ய இயலாதா? சில்வர் பாத்திரம் அல்லது பாட்டில் கொண்டுவந்தால் மட்டும் தான் கிடைக்கும் என்று கட்டுப்பாடு விதித்தால், வாங்க மாட்டோம் என்று மக்கள் பட்டினி கிடப்பார்களா? மக்களின் கெளரவம் குறைந்துவிடுமா?
ஒரே பிரச்சனை யார் கழுவறது?
மளிகை பொருட்கள், அழகு சாதனங்கள், சோப்புகள், ஷாம்பு, எண்ணெய் வகைகள், பேக்கரி உணவுகள் என அனைத்தும் ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியும் பிளாஸ்டிக் கவர் அல்லது பாட்டில்களில் தான் கிடைக்கிறது. இதற்கு எல்லாம் மாற்று கிடையாதா?திருமணம், கட்சி நிகழ்ச்சி, அரசு விழாக்கள், துக்க நிகழ்வுகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிளாள்டிக் கவர், பாட்டில்கள் லட்சக்கணக்கில் குவிகிறது. இவை அனைத்தும் குளம், குட்டை, ஓடை, ஏரிகளில் கொட்டபடுகிறது. இதையெல்லாம் எப்படி தடுப்பது.
ஜோல்னா பையில் ஒவ்வொரு தனிநபரும் தனக்கு வேண்டிய தட்டு, டம்ளர், வாட்டர் கேன் கொண்டுவந்தால் மட்டுமே அரசு, தனியார், அரசியல், ஆன்மீக நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதி என்ற சட்டம் இருந்தால் குப்பையும் வராது, உயிர் இழப்புகளும் நிகழாது. ஒரு துண்டு குப்பை வருமா? இந்த கட்டுப்பாட்டில் நிகழ்ச்சி நடத்தினால் அனுமதி கொடுங்கள். ஆன்மீகம், அரசியல், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கபட வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து நிலைகளிலும் குப்பை மலைபோல குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. எங்கே கொட்டினாலும் எதிர்ப்பு தான். ஏனென்றால் அவ்வளவு துர்நாற்றம், நாய்கள், பன்றிகள் என பல்வேறு வகைகளில் பிரச்சனைகள் வருகிறது. இதற்கு எல்லாம் ஒரே தீர்வு தனிமனித ஒழுக்கம் மட்டுமே?
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒரு முறை உபயோகித்து தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்களில் சிற்றுண்டி, உணவு, தண்ணீர் அருந்தகூடாது. மக்களுக்கு முன் உதாரணமாக அவர்கள் நடந்துகொண்டால், அவர்களை பின்பற்றி அந்த நிகழ்ச்சியிலும் பிளாஸ்டிக் மற்றும் காகித குப்பைகள் தவிர்க்கபடும்.
பிராய்லர் கோழி கழிவுகள்:
ஒவ்வொரு ஊரிலும் ஓடை, பள்ளம், குளம், குட்டை, ஏரிகளில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ கோழி கழிவுகள் சாக்கு மூட்டைகளில் கொட்டிக்கிடக்கிறது. தண்ணீரில் அழுகி மிதக்கிறது. சாலைகளில், பாலங்களில் கடந்து செல்ல இயலாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. இதையெல்லாம் தடுக்ககூட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அல்லது உணர்வு இல்லையா? பாத்திரங்களில் மட்டுமே இறைச்சி விற்பனை என்றால் மக்கள் பட்டினியில் சாவார்களா?
குளம், குட்டை, ஓடை, புறம்போக்கு நிலங்கள், கிணறுகள், கல்குவாரிகள் அனைத்தும் என்றுமே மக்காத மனித குலத்திற்கு, பல்லுயிர்களுக்கு பேராபத்தை உண்டாக்கும் பிளாஸ்டிக், இறைச்சி, மின்சாதனங்கள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகள் கலந்த குப்பைகளை கொட்டுவது படித்த மேம்பட்ட சமூகத்திற்கு கேவலமாக, அவமானமாக,, குற்றமாக தெரியவில்லையா?
மதுபானங்கள் விற்பனை :
மதுபானங்களை தரமான பெட்டிகளில் குளிர்பானங்கள் விற்பதை போல விற்பனை செய்ய இயலாத?
காலி பாட்டில்களை 20 முதல் 30 ரூபாய் வரை வாங்கி,, அதே டிப்பரில் அடுக்கி மீண்டும் கம்பெனிகளுக்கு அனுப்பி பயன்படுத்தினால் கெளரவம் குறைந்துவிடுமா??
யாருமே மதுபானம் வாங்கமாட்டார்களா??
நமது பாட்டன், பூட்டான், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா தெய்வமாக மதித்த விவசாய நிலங்களில், கிணறுகளில், நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி நாசமாக்குவதை தமிழ் சமூகம் சிறிதும் கூச்சமின்றி செய்வது அறமா?
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வியலுக்கான கட்டுப்பாடு என்பது கட்டாயம் ஆக்கபட்டால் மட்டுமே அடுத்த தலைமுறைகள் இந்த மண்ணில் வாழ முடியும். இல்லையென்றால் மாவட்டத்திற்கு அல்ல ஒவ்வொரு தாலூக்காவிற்கும் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டுவருவார்கள்?? அங்குதான் வாழ வேண்டும்.
நீங்கள் கட்டிய மாட, மாளிகைகள், தொழில்கூடங்கள், வணிகவளாகங்கள், கட்டிடங்கள், வாங்கிய நிலங்கள், நகைகள் உங்களின் அடுத்த தலைமுறையை அல்ல உங்களையே வாழவைக்காது என்பதை இனியாவது உணருங்கள்.
