10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம்
*’வாக்கு திருட்டு’ என்ற ’சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது*
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கில் 2022-ல் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்குகளில் அதுகாலம் வரையில் தலையிடாத அமலாக்கத் துறை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பது அரசியல் அறியாத எட்டாம வகுப்பு மாணவனுக்கும் கூட தெரியும்.
• ’’கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் சொன்னார்.
• மூடா ஊழல் வழக்கில், “அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
• சத்தீஸ்கர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், “ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை, தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்குகளில் இதை நாங்கள் பார்க்கிறோம்” என உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சனம் வைத்தது.
அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தன்னுடைய தேர்தல் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது மோடி அரசு. ’சட்டவிரோத பண பரிமாற்றம்’ என பேசும் ஒன்றிய அரசுதான் ’வாக்கு திருட்டு’ அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, பாஜக வாக்கு மோசடி செய்திருப்பது இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது. இதனைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது.
சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் அவரிடம் நிலுவையில் இருக்கிறது. தனது ஏஜெண்டான ஆளுநருக்கு அறிவுரை சொல்லி அதற்கு அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது FIR போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் சிலர் மீது தாக்கலாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் பக்கம் ED தலை வைத்தும் படுக்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது திமுக அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாக்குவது மட்டுமே ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது.
திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; EDக்கும் அஞ்சமாட்டார்கள். திமுகவின் தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண். அதனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். இதனைக் கண்டு மென்மேலும் எரிச்சலுற்று இதுபோன்ற ED சோதனைகளை நடத்தி அச்சுறுத்த கனவு காண்கின்றனர். அது தமிழ்நாட்டில் எடுபடாது.