Sakkraviyugam

September 11, 2025

“சிறையில் நான் இழுத்தது செக்கு அல்ல, அது பாரத மாதாவின் தேர்” என சொன்ன அந்த அப்பழுக்கில்லா தேசபக்தனின் தியாகத்தின் சின்னமாக நிற்கின்றது இந்த உயில்..

வ.உ.சிதம்பரனாரின் உயில் இது :

“மூத்தமகன் ஆறுமுகத்திற்கு பாகம் பிரித்து கொடுத்து பல வருடமாகிறது. பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000, ஓரியண்டல் லைவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் ₹1000 எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்து இருக்கிறேன், ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 லாபம் கிடைக்க கூடும்.

ஆனால் ஒவ்வொரு கம்பெனியிலும் ₹500 கடன் பெற்றுள்ளேன்; கடனுக்கும் லாபத்திற்கும் சரியாக போகும். 2 கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியம் கட்டப்படவில்லை அது கட்டப்பட வேண்டும்.

எனது பாகத்திற்கு ஒட்டப்பிடாரத்தில் பெரிய புஞ்சையில் 2 சங்கிலி நிலமும் 16 மரக்கால் நஞ்சையும் கிணற்று தோட்டமும் இருக்கிறது, இது தவிர ஒட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 1.75 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று, .75 சங்கிலி புஞ்சை ஒன்றும் இருக்கின்றன.

என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ள புஞ்சைகளையும் பயிர் செய்ய முடியாது. அவற்றை தங்கள் பெயருக்கு ₹500 கிரயம் செய்து கொடுக்க நினைத்து கொண்டு இருக்கிறேன்.

ஒட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. மச்சை பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் 3 அடி உயர்த்தி தேக்கு தேக்கு மரக்கட்டை போட்டு மேல் பக்கமுள்ள இரண்டு சன்னகளுக்கு நேராக கீழ் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்து அரைவிட்டை புதுப்பித்து கொடுக்க வேண்டும்……

இப்போழுதும் ₹200 விலை போகக் கூடிய சட்ட புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன அவற்றை விற்க வேண்டும்.

இப்போது செய்ய வேண்டிய அவரச காரியம் என் மகளிருவரில் மூத்தவளாகிய சௌபாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்குகலியாணம் செய்து வைக்க வேண்டும் ₹500 க்கு அவளிடம் நகைகள் இருக்கின்றன.

இன்னும் ₹500 க்கு நகைபோட வேண்டும். கலியாணப் பந்தல் செலவு ஒரு வருஷத்து சீராட்டு செலவு என ஒரு கம்பெனி பணம் ₹1000 சரியாய் போகும்.

மரகதவல்லி அம்மாளுக்கு இன்னும் இரண்டு வருடம் கழித்து கலியாணம் செய்து வைக்க வேண்டும் அவளுக்கும் அவளிடம் இருக்கின்ற நகைகளை சேர்த்து ₹1000 க்கு நகைகளை போட வேண்டும் அதற்கு மற்றொரு கம்பெனி பணம் சரியாய் போகும்.

என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகளை தாங்கள் வாங்கி வைத்து இருந்து கோவாப்பிரேட்டிங் சொஸைட்டியில் கொடுக்கிற கரண்ட் டிபாஸிட் வட்டி போட்டு கொடுக்க வேண்டும்.

இந்த நிலைமையில் என் மனைவி மக்களுக்கு அன்னவஸ்திர கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயல்கிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன

தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு 5 மாத வீட்டு வாடகை ₹135

தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ₹30

வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ₹30

சில்லறை கடன் ₹60

இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ₹20

சோமநாத்துக்கு ₹16

வேதவல்லி ₹50

கடைசியாக நான் கேட்பது எனது தம்பி மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு, பட்டினி கிடக்காமல் சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்”

உண்மையான சத்திய சோதனையும், நெஞ்சுக்கு நீதியும் இதுதான், இந்த உயில்தான்

“சிறையில் நான் இழுத்தது செக்கு அல்ல, அது பாரதமாதாவின் தேர்” என சொன்ன அந்த அப்பழுக்கில்லா தேசபக்தனின் தியாகத்தின் சின்னமாக நிற்கின்றது இந்த உயில்..

Scroll to Top