Sakkraviyugam

September 11, 2025

திருச்சியில் வியாபாரிகள் சில்லறை வணிகத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து முற்றுகை போராட்டம் – உரிய தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும் என எச்சரிக்கை

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறு, குறு நடுத்தர வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டத்திற்கு மாற்றாக சுயதொழில் என்ற அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சில்லரை வணிகம் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றது. மேலும் சிறு, குறு நடுத்தர வணிகர்களின் வருவாய் ஆதாரமாகவும், வாழ்வாதாரமாகவும் சில்லறை வணிகம் விளங்கி வருகின்றது.


இந்த நிலையில் அண்மைக்காலமாக அகில இந்திய அளவில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடி சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், ஏராளமான சலுகைகள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்து வருகின்றன. இதனால் சிறு -குறு நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமானோர் தங்கள் வணிகத்தை இழந்து மாற்று வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் என்றே கருத வேண்டியுள்ளது.


இதில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் திருச்சியில் ஏற்கனவே 2 இடங்களில் மிகப்பெரிய அளவில் இயங்கி வருகின்றது. தற்போது இதே திருச்சியில் 3வது கிளையை 1,50,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்க ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏறத்தாழ 30 லட்சம் சில்லரை வணிகர்கள் சிற்றூர் முதல் நகரம் வரை பரந்து விரிந்து சுமார் 1 கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய வணிக குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் நடத்துவது என பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. திருச்சியில் கார்ப்பரேட் நிறுவனத்தின் 3வது கிளை அமைய உள்ள வயலூர் ரோடு வாஸன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் அடையாள முற்றுகை போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார் வரவேற்றார்.
இந்தப் போராட்டத்தில் மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு தலைவருமான கந்தன்,மாநில பொதுச் செயலாளர் அன்பழகன்,மாநில பொருளாளர் அம்பாள் ஸ்ரீ ராம குமார்,மாநிலத் துணைத் தலைவர்கள் . கே.எம். எஸ். ஹக்கீம்,ரங்கநாதன்,மாநில இணைச்செயலாளர்கள் எம்.கே.கமலக்கண்ணன், ராஜாங்கம்,திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன்,மற்றும்
மாநில கூடுதல் செயலாளர்கள், மண்டல தலைவர்கள், மாநில துணைதலைவர்கள், மாநில இணைசெயலாளர்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தின் கிளைச்சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதுமுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள், இளம் தொழில் முனைவோர் அணியினர், பழைய பொருள் அணியினர் உட்பட மாநிலம் முழுவதிலுமிருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு தொழில் சார்ந்த வணிக சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-

“கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லரை வணிக ஆதிக்கத்தினால் சிறு,குறு அடித்தட்டு வணிகர்களுக்கு வருவாய் இழப்பு வாழ்வாதார இழப்பு ஏற்பட்டு வருமை நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கும் விதமாகவும் சில்லரை வணிகத்தை பாதுகாக்கும் விதமாகவும் முதற்கட்டமாக இவ் அடையாள முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது. எனவே மத்திய -மாநில அரசுகள் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சில்லரை வணிக ஆதிக்கத்தை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும். உரிய தீர்வு ஏற்படாத பட்சத்தில் டி-மார்ட் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் முற்றுகையிடும் போராட்டம் மிகத் தீவிரமாக விரைவில் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார். போராட்டத்தின் இறுதியில் மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கதுல்லா நன்றி கூறினார்.

இப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் எம். தமிழ்ச்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் செந்தில் என்.பாலு, மாவட்ட பொருளாளர் எ.தங்கராஜ், மாநகர தலைவர் எஸ்.ஆர்.வி கண்ணன், மாநகர செயலாளர் வி.பி.ஆறுமுகப்பெருமாள், மாநகர பொருளாளர், ஜி.ஜானகிராமன், திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் எஸ்.கார்த்திக், மாவட்ட பொருளாளர் ஆர்.பிரசன்னன், திருச்சி மாநகரஇளைஞரணி தலைவர் கே.எம். எஸ். மைதீன், மாநகர செயலாளர் ப.திருமாவளவன், பொருளாளர் எஸ்.ஆர்.எம்.அப்பாதுரை மற்றும் திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், வயலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நலச் சங்கம், சோமரசம்பேட்டை, ரெட்டைவாய்க்கால், அல்லித்துறை, வியாழன்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதி வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Scroll to Top