திருமுருகன்பூண்டி நல்லாறு காக்கப்படுமா?
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரை நம்பி இருக்கும் பூண்டி நகர வாசிகள்..!
சுற்றுச்சூழல் சுழற்சியில் மழை மறைவு பகுதியில் தலையெழுத்து கண்டிப்பாக மாறவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

நல்லாற்றின் நீரோட்டத்துடன் இயற்கை தொடர்பு உள்ளது…!
நல்லாறு எங்கே? தேடிய போது கைவிரித்த கூகுள் மேப்
08.10.2025 மாலை 5 மணி அளவில் திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தர்ணா போராட்டத்தை அறிவித்து, நடத்தியும் காட்டி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நல்லாற்றை பாதுகாக்க வேண்டும் என்பதே!
முக்கிய ஏரிகள் (Tanks / Lakes)
அவிநாசி பெரிய ஏரி, அவிநாசி நகரத்திற்கு நீர்விநியோக ஆதாரமாக உள்ளது. நல்லாற்றின் நீரோட்டத்துடன் தொடர்புடையது. திருமுருகன் பூண்டி முருகநாதேசுவரர் கோயிலில் உள்ள தீர்த்தங்கள்:
சண்முக தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் இவை கோயிலுக்குள் உள்ள புனித நீர்தொட்டிகள் ஆகும், இவை பெரும்பாலும் நல்லாற்றின் நீரோட்டத்துடன் இயற்கை தொடர்பு உள்ளது.
🛡️ முக்கிய தடுப்பணைகள் (Check Dams / Barrages)
நல்லாறு குறுக்கே அமைந்துள்ள சிறிய தடுப்பணைகள் அவிநாசி மற்றும் திருமுருகன் பூண்டி நகராட்சிக்குள் உள்ள பகுதிகளில் மழைக்கால நீர்போக்கை கட்டுப்படுத்த சில சிறிய தடுப்பணைகள் உள்ளன.
இவை பெரும்பாலும் புதர்மண்டி மாசு மற்றும் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. திருமுருகன்பூண்டி நகராட்சியோ அல்லது அரசு துறையிலோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக குறிப்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
நல்லாறு என்னவாயிற்று? எதற்காக இந்த போராட்டம் ?
- நல்லாறு என்னவாயிற்று? எதற்காக இந்த போராட்டம் ? என்று கள ஆய்வு செய்ததில், அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் கிடைக்கப்பெற்றது. நல்லாறு முழுவதும் தூர்வாரப்படாமலும் கழிவுகள் கொட்டப்படும் இடங்களாகவும், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையிலும் வழிநெடுகிலும் கழிவு நீர்கள் கலக்கும் ஓர் சாக்கடை வடிகாலாகவும், இருந்ததை காண முடிந்தது.. குறிப்பாக திருமுருகன் பூண்டி நகராட்சி எந்தவித நடவடிக்கையும் இதில் எடுக்கவில்லை என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டு. அதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது. சுகாதாரத் துறைக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது! கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணிக்க வேண்டியது இந்த இரண்டு அரசுத் துறைகளே!
- நல்லாறு என்பது நொய்யல் நதியின் முக்கிய கிளை நதிகளில் ஒன்றாகும், இது அவிநாசி மற்றும் சுற்றுப்பகுதிகளை வளமாக்கிய சிற்றாறு ஆகும். அதன் வழிநெடுகத் தடுப்பணைகள் கட்டப்பட்டு இப்பகுதியை வளமாக்கிய பொற்காலம் ஒன்றிருந்தது. தன் வழியில் பாய்ந்தும் தேங்கியும் சென்றாலே அப்பகுதியில் நிலத்தடி நீர்ப்பெருக்காகும். பயிர்த்தொழில் வளரும். உற்பத்தியாகும் இடத்திலிருந்து மடைமாற்றி வழிமாற்றி அமைத்ததில் நல்லாறு வந்த வழியைத் தேடவேண்டியிருக்கிறது. நல்லாறு நன்கு பாய்ந்திருக்குமானால், அவிநாசிக் கோவிலின் பின்புறமுள்ள ஏரியில் கடல்போல் நீர்நிறைந்திருக்கும் என இந்தப் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கிறார்கள்.
நல்லாறு நதியைப் பற்றிய விரிவான தகவல்கள் கீழே:
🌊 நல்லாறு நதியின் தோற்றம் மற்றும் பாதை : –
உதகை மலைத் தொடரில் உருவாகும் சிறிய ஓடைகள் ஒன்றிணைந்து, நல்லாறு நதியாக உருவாகின்றன.அவிநாசி, மேட்டுப்பாளையம், கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பாய்ந்து, நொய்யல் நதியில் கலக்கிறது. நல்லாறு வழியாக பாயும் நீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கிறது, பயிர் வளர்ச்சிக்கு, மற்றும் ஏரிகள், தடுப்பணைகள் வழியாக நீர் சேமிப்பு செய்ய நல்லாற்றின் வழியில் பழமையான தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன, அவை நீர் தேக்கி விவசாயத்திற்கு பயன்பட்டன. நீரின் போக்கை மாற்றி, ஏரிகள் மற்றும் வயல்களுக்கு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
⚠️ நல்லாறு நதியின் இன்றைய நிலை : – நல்லாறு நதி பெருக்கெடுத்து பாயும் நிலை குறைந்துள்ளது. கழிவுகள் மற்றும் வழிமாற்றங்கள் காரணமாக, அதன் இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது.- நீர்நிறைவு குறைந்து, ஏரிகள் வறண்ட நிலையில் காணப்படுகின்றன. நல்லாற்றின் நடுப்பணையாக உள்ள நஞ்சராயன் குளத்துக் கரை, மறுபுறம் தனியார்க்கு உடைமையாக்க கம்பிவேலியிடப்பட்டிருப்பது எவ்வாறு என்பது இன்னொரு புரியாத புதிர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த பாதிப்புகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுத்து போராடி வருகிறது என்று அவிநாசி ஒன்றிய குழு உறுப்பினர்களும், மாவட்ட உறுப்பினர்களும் பேசியதை காண முடிந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறாகவே உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் இதில் தலையிட்டு விரைவான நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். என்றாவது ஒரு நாள் நல்லாறு நதி பெருக்கெடுத்து பாய வேண்டும், சுற்றுச்சூழல் சுழற்சியில் மழை மறைவு பகுதியில் தலையெழுத்து கண்டிப்பாக மாறவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் விருப்பம் தெரிவிக்கிறார்கள்.
