திருப்பூரில் ஒரே பெர்மிட்… பல இடங்களில் வெட்டி எடுக்கப்படும் கிராவல் மண்
திருப்பூரில் என்ன செய்கிறது மாவட்ட நிர்வாகம்…
திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் அரசின் அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுவதாக பல தரப்பினரும் கூறிவரும் நிலையில், இது சம்பந்தமாக களத்தில் இறங்கினோம் நாம். திருப்பூர் மாவட்டத்தில் எப்போதுமே அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது புதியதாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு பகல் எந்நேரமும் அரசின் அனுமதியின்றி, கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட லோடுகள் வெட்டி எடுக்கப்பட்டு வெளியில் அனுப்பப்படுகிறது.

- கிராவல் மண் வெட்டி எடுத்து செல்வதற்கு ஒவ்வொரு நடைக்கும் ஒரு அனுமதி சீட்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது 15க்கும் மேற்பட்ட இடங்களில் கிராவல் மண் வெட்டி எடுத்தும், ஒரே ஒரு அனுமதி சீட்டை மட்டும் வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களில் மண் திருடப்பட்டு வருகிறது. புவியியல் மற்றும் சுரங்கத் துறை விதிகளின்படி, கிராவல் மண் வெட்டி எடுத்து அனுப்பப்படும் போது, அனுமதி சீட்டு கட்டாயம் கொடுத்தாக வேண்டும். ஆனால் புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, இவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பர்மிட் இல்லாமல் பல்வேறு இடங்களில் வெட்டி எடுத்து வருகின்றனர். இந்த கிராவல் கொண்டு செல்லப்படும் வாகனம் ஏதேனும் ஒரு விபத்திற்கு உள்ளாகிவிட்டால், அந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று.
- திருப்பூர் மாவட்டத்தில் பகல் நேரங்களில் மட்டுமே 500க்கும் மேற்பட்ட லாரிகளில் திருட்டுத்தனமாக வெட்டி எடுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் கனிம வளங்கள் லாரிகளில் பறந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, திருட்டுத்தனமாக தினசரி வெட்டி எடுக்கப்படும் நூற்றுக்கணக்கான கிராவல் மண் லோடு வண்டிகளை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறது. இதில் கேலி கூத்து என்னவென்றால் மாவட்ட நிர்வாகமோ கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.
தேசிய சட்ட உரிமைகள் கழகத்தில் திருப்பூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் புகார்
நிலத்தடி நீர்மட்டம் குறைவதாலும், மாசுபடுவதாலும் அரசின் அனுமதியின்றி, கிராவல் மண்வெட்டி எடுக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதால், தங்களது அமைப்பின் மூலமாக சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டி, தேசிய சட்ட உரிமை கழகத்தில் திருப்பூர் மாவட்ட சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.
கிராவல் மண் வெட்டி எடுப்பது இயற்கை வளங்களை சுரண்டுவதாக இருந்தாலும், பல நூறு அடிகள் வெட்டி எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றது. இவற்றையெல்லாம் எதையுமே கண்டும் காணாமல் இருக்கும் புவியியல் மற்றும் சுரங்கத் துறையும், மாவட்ட நிர்வாகமும் என்ன சொல்ல போகிறது .
