கலைத் திருவிழாவால் களைகட்டிய கணேஷ் பொறியியல் கல்லூரி!” – 15-வது ஆண்டு ‘Razzmatz 2026’ கோலாகலம்.
- சேலம், ஆகஸ்ட் 28:
- சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியின் 15-வது ஆண்டு விழாவான ‘Razzmatz 2026’ கல்லூரி வளாகத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவிற்குத் தாளாளர் தங்கவேல் தலைமை தாங்கி, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தித் தலைமையுரையாற்றினார். கல்லூரிச் செயலாளர் தா. விஜயகணேஷ், பொருளாளர் தா. செந்தில்குமார் மற்றும் முதல்வர் முனைவர் மூ. சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னிலை வகித்து, கல்லூரியின் ஓராண்டு காலச் சாதனைகளை விளக்கி வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழா மாணவர்களின் கலைத்திறனைப் பறைசாற்றும் ஒரு களமாக அமைந்தது. மேடையில் மழலையர் போலத் துள்ளி விளையாடிய பரதநாட்டியம், இளசுகளை உற்சாகப்படுத்திய குழு நடனங்கள் மற்றும் சமூகச் சிந்தனையைத் தூண்டும் வகையிலான குறுநாடகங்கள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.
தொடர்ந்து, பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.
