Sakkraviyugam

April 20, 2026

மயிலாடுதுறை மன்மதராசா கார்த்திகேயன்…அறநிலையத்துறையில் வேடிக்கை பார்க்கும் இணை ஆணையர்…

மயிலாடுதுறை அறநிலையத்துறையில் மன்மதராசா கார்த்திகேயன்… வேடிக்கை பார்க்கும் இணை ஆணையர்…

பெண் ஊழியரின் கண்ணீர் பேட்டி!

இந்து சமய அறநிலையத்துறை என்பது இப்பூவுலகில் அனைத்து இந்து தெய்வங்களும் குடி கொண்டிருக்கும் புனிதத் தன்மைகளை கட்டிக் காத்திட வேண்டிய துறை என்பதாலேயே, இதற்கு அறம் என்ற சொல்லில் தொடங்குமாறு அமைக்கப்பட்ட துறையாகும். ஆனால் சில காட்டுமிராண்டிகளின் அற்ப செயலினால் புனிதம் என்ற வார்த்தைக்கும் அறம் என்ற வார்த்தைக்கும் மரியாதை இல்லாமலேயே ஆகிவிட்டது.

இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள அனந்தமங்கலம் ஶ்ரீராஜகோபால திருக்கோவிலில், (அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்), கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல் அலுவலராக பணிபுரிந்து வரும், கார்த்திகேயன் என்பவர் தனது கோயில் பணிகளை பார்க்கிறாரோ, இல்லையோ நித்தம் நித்தம் சகப் பெண் பணியாளர்களிடமும், உள்ளூரில் சில பெண்களிடமும் தனது சில்மிஷ லீலைகளை காட்டி வருவதாக பலதரப்பட்ட புகார்கள் எழுந்த நிலையில், கோவில் அர்ச்சனை சீட்டு விற்கும் பெண் பணியாளரிடம் விசாரித்த போது,

என்னை இரட்டை அர்த்தத்தில் பலமுறை பேசி வந்த போதிலும், அவரின் பேச்சுவார்த்தை, பழக்க வழக்க நடைமுறைகள் அறவே எனக்கு பிடிக்கவில்லை. அதனால் ரொம்பவே ஒதுங்கி இருந்தேன். அதற்குப் பிறகும் பணி சார்ந்த விஷயங்களில் பல வகைகளில் என்னை டார்ச்சர் செய்து வந்தார். EO வின் இவ்வளவு கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு, வெளியில் சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் கண்ணை கசக்கி கொண்டிருந்தேன். நான் எதற்கும் உடன்படாததால், எனக்கு மெமோ கொடுத்தார். அதற்கு உரிய விளக்கம் கொடுத்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை.
அதன் பிறகு வேறு வழியின்றி உதவி ஆணையர் ரவிச்சந்திரன் அவர்களிடம் முறையிட்டேன். AC சார் விசாரித்து, EO செய்வதெல்லாம் உண்மை என தெரிந்த பிறகு, EO வை பலமுறை கண்டித்தார். அதன் பிறகும் “செவிடன் காதில் ஊதிய சங்கு போல”, ஏசி சார் கண்டித்ததை காதில் வாங்காமல், நீ என்ன மேலதிகாரியிடம் புகார் செஞ்சியா? வேலை செய்வதற்கு என்கிட்ட தான் வரணும், உன்ன தொலைச்சுப்புடுவேன் என மிரட்டினார். நான் சொல்றபடி நடந்துக்கிட்டா, உனக்கு எந்த பிரச்சனையும் வராது. இல்லை என்றால் நீ யார்கிட்ட வேணும்னாலும் கம்ப்ளைன்ட் பண்ணு. உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாதுன்னு ஆபாச வார்த்தையில் திட்டி வந்தார். இவர் இங்கு வேலைக்கு வந்ததிலிருந்து இதுவரைக்கும் என்னை ஒருமையில் தான் பேசி வருகிறார். AC சார் இல்லையென்றால், ஒன்றரை வருடங்களாக நான் உயிர் வாழ்ந்திருக்கவே முடியாது என்றார் கண்ணீர் மல்க .

கடந்த ஒன்றரை வருடங்களாக கண்ணியமிக்க பெண் ஊழியருக்கு, EO கொடுத்து வரும் இன்னல்ககளும், இம்சைகளும் டார்ச்சர்களையும் தாங்கிக் கொண்டதோடு, வேலை கொடுக்காமலும் ஒதுக்கி வைத்திருக்கிறார். EO செய்வதை முழுமையாக தெரிந்த பிறகும் கூட இணை ஆணையர் சிவக்குமார், செயல் அலுவலர் கார்த்திகேயனை பெயரளவில் கூட விசாரிக்கவோ கண்டிக்கவோ இல்லை என மயிலாடுதுறை அறநிலையத் துறையினர் ஒப்பாரி வைக்கின்றனர்.

இதோடு மட்டுமில்லாமல் அறநிலையத்துறை வட்டாரங்களில் தமிழக அளவில் கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த அவலம் தான் இது. இந்த அவல நிலைக்கு முடிவு கட்டுவது யார்? அதுவரை கணத்த இதயங்களுடன் காத்திருப்போம் நாமும்.…….

Scroll to Top