நான் நல்லாறு பேசுகிறேன் …..
எவர் கூறும் குறைகளை தீர்த்து வைக்கும் வல்லமை மிக்க மாவட்ட மன்னவனுக்கு ( ஆட்சியர் ), இந்த நல்லாறு கூறும் குறைகளையும் தீர்த்து வைப்பீர்களா?
நான் அவிநாசி, கோவை சுற்று பகுதியை வளமாக்கிய சிற்றாராவேன். என் வழி நடுக தடுப்பணைகள் கட்டப்பட்டு பல பகுதிகளை வளமாக்கிய பொற்காலம் ஒன்று இருந்தது.
“ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும்
அவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்” பொருளுரை : ஆற்றில் வெள்ளம் வற்றிப் போய், நடந்து செல்வோரின் பாதங்களை ஆற்று மணல் சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் கூட, அந்த ஆறானது ஊற்று நீரைத் தந்து மக்களின் தாகத்தை தணிக்கிறது. அது போல நற்குடியில் பிறந்தவர்கள் தம் செல்வமெல்லாம் இழந்து வறுமை உற்ற காலத்திலும் கூட, இரவலர்களுக்கு மனமிசைந்து “இல்லை என சொல்ல மாட்டார்கள்”. ( இயன்றதை செய்து தருவர் எனப் பொருள் ).
- நான் உதகை மலைத்தொடரில் பிறந்து, சிறிய ஓடைகளை என்னுடன் ஒன்றிணைத்து நல்லாறு நதியாக உருவாகி, அவிநாசி மேட்டுப்பாளையம், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்ந்து, நொய்யல் நதியில் கலக்கிறேன். எனது வழியாக பாயும் நீர் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும், பயிர் வளர்ச்சிக்கு மற்றும் ஏரிகள் தடுப்பணைகள் வழியாக நீர் சேமிப்பு செய்ய என் வழியில் பழமையான தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் மூலம் விவசாயத்திற்கு நான் பயன்பட்டதோடு, பெருக்கெடுத்துப் பாயும் நதியாக இருந்தேன்.
- ஆனால் இன்றைய நிலையில் :
- நான் பெருக்கெடுத்துப் பாயும் நிலை குறைந்துள்ளது. ஊர் கழிவுகள், வழிமாற்றங்கள் இதன் காரணமாக என்னுடைய இயல்பு பாதிக்கப்பட்டுள்ளது. நீர் நிறைவு குறைந்து நஞ்சராயன் குளத்திற்க்கு நான் செல்வதற்கு வழி தெரியாமல் போய்விட்டது.
எனது நீர் வழித்தடத்தின் வாழ்ந்த பல கோடி மக்களை வாழ்வித்து வந்த நான் தங்களின் அடுத்த தலைமுறைகளுக்கும் சேவை செய்ய ஆசைப்படுகிறேன். மாவட்ட மன்னவனே (ஆட்சியரே), எனது ஆசை நிறைவேறுமா? என்னை உயிர்ப்பிக்க ஆசை கொண்டு உங்களை நாடுகிறேன் !!!!
இவ்வாறாக ….,
நல்லாறு


