போக்குவரத்து சீரமைப்பில் முன்னெடுப்பு! திருப்பூர் போக்குவரத்து காவல் துறையினருக்கு – பொது மக்கள் பாராட்டு
மேலும் சில இடங்களில் சீரமைக்க போக்குவரத்து ஆணையருக்கு வேண்டுகோள்!
போக்குவரத்து நெரிசல் நிறைந்த பிரதான சாலையாக திருப்பூர் அவிநாசி ரோடு உள்ளது.
இதனை திருப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் சரி செய்யும் நோக்கத்தோடு முதற்கட்டமாக புஷ்பா தியேட்டர் சிக்னலில், வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்களை செய்தனர்.
இது போன்று தற்பொழுது எஸ்.ஏ.பி தியேட்டர் சிக்னலும், நெரிசல் இல்லாத வகையில் சில மாற்றங்களை கையாண்டுள்ளனர். இது பொது மக்களுடைய மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினரிடம் சில வேண்டுகோளையும் வைக்கிறார்கள்.
இதுகுறித்து மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மாநில இணைச் செயலாளர் லூ. ஜேம்ஸ் கென்னடி அவர்கள் கூறியதாவது:
திருப்பூர் குமார் நகர் மின் வளாகத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் மற்றும் 2, 110 கி.வோ. துணை மின் நிலையங்கள், இரண்டு பிரிவு அலுவலகங்கள் ,MRT, சிறப்பு பராமரிப்பு பிரிவு ,வாரிய குடியிருப்புகள் உள்ளது. நூற்றுக்கணக்கான நபர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். பொதுமக்களும் மின் கட்டணம் செலுத்துதல் உட்பட மின்வாரிய தேவைகளுக்காக தினந்தோறும் அவிநாசி சாலையை கடந்து குமார் நகர் மின்நிலைய வளாகத்திற்குள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு ஒவ்வொரு முறையும் சாலையை கடந்து வரும் பொழுது எதிரே உள்ள சிக்னல் திருப்பூரிலிருந்து, நேராக அவிநாசிக்கும் , இடது புறமாக முருங்கபாளையம் ஹவுசிங் யூனிட் மற்றும் ரேவதி மருத்துவமனை சாலைகளில் பயணிக்கவும், வலது புறமாக மின்வாரிய அலுவலகம் நோக்கி U turn அனுமதிக்கப்படுகிறது. அதேபோல்அவிநாசி சாலையில் இருந்து திருப்பூருக்கு செல்லவும் ,வலது பக்கமாக திரும்பி U turn செல்லவும், ரேவதி மருத்துவமனை, ஹவுசிங் யூனிட் சாலைகளில் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.
மின் நிலைய வளாகத்தில் இருந்து வெளியே சென்றால் எதிரே உள்ள சிக்னலை கடப்பதற்கு, ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்து ஏஞ்சல் ஹோட்டல் அருகில் உள்ள சிக்னலில் வலதுகைப் பக்கம் திரும்பி மீண்டும் குமார் நகர் சிக்னலுக்கு வரவேண்டியுள்ளது, காரணம் இடையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம் உள்ள சாலையும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
எனவே மக்களும், வாரிய பணியாளர்களும் அவசர பணிகள் காரணமாக வாகனத்தில் வெளியே செல்லும் போதும், வரும் போதும் சிக்னலை கடக்கும் பொழுது விதிமுறைகளை மீறி செல்கிறோம் என்கிற ஒரு குற்ற உணர்வுடன் சிக்னலை குறுக்காக கடந்து செல்கிறார்கள்.
சில நேரங்களில் இது விபத்திற்கும் வழிகாட்டுகிறது. கடந்த சில மரதங்களுக்கு முன்பு மின்வாரிய ஊழியர் ஆறுமுகம் என்பவர் நடந்து சென்று சிக்னலை கடக்கும் பொழுது விபத்தில் சிக்கியுள்ளார்.
எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு ரேவதி மருத்துவமனை மற்றும் ஹவுசிங் யூனிட் பகுதியிலிருந்து, அவிநாசி சாலைக்கு வரும் வாகனங்களுக்காக நிறுத்தப்படும் 15 நொடியில் அவிநாசியில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்களும் நிறுத்தப்பட்டால் மின் நிலைய வளாகத்தில் இருந்து சாலையை கடப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
அல்லது மின்வாரியத்தில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் பாதையில் பார்க் அவென்யூ அல்லது பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள ஏதாவது ஒரு டிவைடர் திறக்கப்பட்டால், வாகன ஓட்டிகள் வலது புறமாக திரும்பி அவினாசி சாலையில் பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதுகுறித்து மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மாநில இணைச் செயலாளர் லூ. ஜேம்ஸ் கென்னடி அவர்கள் போக்குவரத்து ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.