திருப்பூர் 05
சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் சிறந்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு துறையில் இருந்தும் அந்தந்த துறை தலைவர்கள் பணியாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். இவ்வாறு தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் பணியாளர்கள் உண்மையில் சிறந்தவர்களா? என்று ஒரு புலனாய்வு மேற்கொண்டோம். அதில் நாம் எடுத்துக் கொண்டது தமிழ்நாடு மின்சார வாரியம் ! திருப்பூர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வருடந்தோறும் மேற்கண்ட இரண்டு அரசு விழாக்களில் பணியாளர்கள் தொடர்ச்சியாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அருணாச்சலம் என்கிற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு 15.03.2023 அன்று தகவல்களை பெற்றுள்ளார். அதில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் , எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்கிற அவர்களின் தகுதியையும் கேட்டு தகவல்களை பெற்றுள்ளார்.
நேர்மையாக பணியாற்றுகிறவர்கள், திறமையான பணியாளர்கள், கூடுதல் பணிகளை செய்கிறவர்கள், மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்கள் என்கிற தகுதிகள் புறக்கணிக்கப்பட்டு, மக்களிடம் கடமையை செய்ய பணம் கேட்பவர்கள், வாரிய பணியை செய்வதற்கு மக்களிடம் வாகனம் மற்றும் பணம் பெற்று கம்பங்களை நிறுவியவர்கள் மற்றும் அலுவலகப் பணிகளில் தங்கள் கடமைகளை செய்யவே, பணம் கேட்பவர்கள் போன்ற தவறான நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
வாரிய பணியில் மிகக் குறைந்த அனுபவமே உள்ள தமிழ் எழுத படிக்க தெரியாதவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது. குறிப்பாக பிரிவு அலுவலகத்தில் மக்களுக்கு 24 மணி நேரம் நேரடியாக பணியாற்ற வேண்டிய முகவரி ஒருவர் தனது செல்வாக்கினால் செயற்பொறியாளர் அலுவலகத்தில் தற்காலிக இடம் மாறுதல் பெற்று பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவர், அதிக அளவில் பெறப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மனுக்களின் பேரில் துரிதமாக பதில் அளிப்பதில், சிறப்பாக செயல்பட்டுள்ளார் எனக் கூறி அதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. வாரிய விதிமுறைப்படி இவரை அந்த பணிக்கு பயன்படுத்தியதே தவறாகும்.
உதவி பொறியாளர் ஒருவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி உள்ளார் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த பிரிவில் விசாரித்ததில் அப்படி ஒன்றும் அங்கு 100 மின்கம்பங்கள் மாற்றப்படவில்லை. அப்படி மாற்றப்பட்டிருந்தால், அதற்கான பணி ஆணைகள், அந்த ஒரு பிரிவிற்கு மட்டும் எப்படி 100 கம்பங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் யாரால் செய்யப்பட்டது? அது எந்த காலத்தில் மாற்றப்பட்டது, என்கிற தகவலும் அந்த அலுவலகத்தில் கிடைக்கவில்லை. இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒருவர் கூட நல்லவர் என்று அங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கவில்லை. எனவே மதிப்புமிக்க மாவட்ட ஆட்சித் தலைவரின் விருதுகள், கேலிக் கூத்தாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என சந்தேகப்படுகிறோம். இதனை தடுத்து நிறுத்தும் வகையில் விருது பெற்றவர்கள் குறித்து மின்வாரிய விஜிலன்ஸ் வழியாக ஒரு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் தகுதியுள்ள நபர்கள் உண்மையான திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நேர்மையான, திறமையான, கடமை தவறாத பணியாளர்கள் மட்டுமே கவுரவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவல்கள் அனைத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 05.08. 2023 அன்று சமூக ஆர்வலர் அருணாச்சலம் கடிதமாக புகார் அனுப்பி உள்ளார். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர் அருணாச்சலம் தெரிவிக்கிறார்.
பொது தகவல் அலுவலர் செயற் பொறியாளர்(பொ) பொறி.ஜி.கலைச்செல்வி அவர்கள் அளித்த தகவலில் , அந்த பட்டியலில் இடம் பெற்ற ஒவ்வொருவரும் தகுதியானவர்களா? என பொதுமக்களிடமும் , மின்வாரிய பணியாளர்களிடமும் கள ஆய்வு மேற்கொண்டோம். அந்த தகவல்களின் அடிப்படையில் அதில் ஒருவரை கூட தகுதியானவர் என யாரும் சொல்லவில்லை. பலரும் புகாருக்கு ஆளானவர்களாகவே இருக்கிறார்கள்.
இது குறித்து வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் இவர்கள் எல்லாம் சிறந்த பணியாளர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் இது குறித்து உங்களுக்கு தெரியுமா என கேட்டதற்கு ஒருவருக்கும் அது குறித்து தெரியவில்லை. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகள் கூட மின்வாரியத்தை சார்ந்த மற்ற பணியாளர்கள் அங்கே அழைக்கப்படுவதில்லை . அனைத்தும் ரகசியமாக நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தார்கள்.
மேலும் மேலதிகாரிகளுக்கு இணக்கமாகவும் அவர்கள் விரும்பும் வகையிலும் நடந்து கொள்ளக்கூடிய பணியாளர்கள் மட்டுமே இவ்வாறு தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவரம் காலம் காலமாக நடந்து வருவது வெளிச்சத்துக்கு வருகிறது .
துறை தலைவர்கள் அனுப்பி வைக்கும் பட்டியலில் இடம்பெற்ற நபர் குற்றவாளியாகவே இருந்தாலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் எந்தவித ஆய்வும் செய்யப்படுவதில்லை என்றும் நேரடியாக அவர்களுக்கு விருது வழங்கப்படுவது தெரிய வருகிறது.
இந்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பதால் இவை அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் மேலான கவனத்திற்கு, மீண்டும் கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டும் இதே போல் தவறான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே உரிய நபர்களை தேர்ந்தெடுக்க உத்தரவிடவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சரியானவர்களா , தகுதியானவர்களா, லஞ்சத்தில் ஈடுபடாதவர்களா, குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாத நபர்களா என்பதை ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.